கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாதியர் சங்கம் உட்பட 7 பிரிவுகள் இணைந்து இன்று (08) ஒரு மணி நேர அடையாள போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
வைத்தியசாலையின் பொது வாகன தரிப்பிடத்தை வைத்தியர்களின் வாகனங்களுக்கு மாத்திரம் ஒதுக்கி வைத்திருத்தல், தாதியர் நிர்வாக சேவையில் அவசியமின்றி தலையிடுதல், வைத்தியசாலை நிர்வாக வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கமைய செயற்படுதல் மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு வகையில் நடந்துகொள்தல் என்பனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது,
அவசர சிகிச்சை சேவைக்கு எவ்வித தடையுமின்றி தாதியர், எக்ஸ்ரே பிரிவு, மருந்து வழங்குநர்கள் மற்றும் ஆய்வுகூட உத்தியோகத்தர்கள் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
வைத்தியசாலை சேவை அனைத்து பிரிவினருக்கும் சமமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் சமன் பதிரன, வைத்தியசாலையின் பொது வாகன தரிப்பிடத்தை வைத்திய அதிகாரிகள் உட்பட அவசர சேவைக்காக வரும் அனைத்து ஊழியர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் அனைத்து பிரிவினருடன் கலந்துரையாடி இத்தீர்மானம் எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள பணிப்பாளர் எந்தவொரு தனிப்பட்ட ரீதியாக தீர்மானங்களை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.