எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
2,500 ரூபா தொடக்கம் 10,000 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கப்படும். அதேவேளை, தனியார் துறையினருடைய சம்பளத்தையும் அதிகரிக்கச் செய்யுமாறு கோருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஐ.ம.சு.மு காமினி லொகுகே முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐந்து கட்டங்களாக சம்பள அதிகரிப்பை வழங்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் இறுதிக் கட்டத்தின் கீழ் 2020 ஜனவரி மாதம் மேற்கூறப்பட்ட வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். இதுதவிர, முப்படை, நீதித்துறை மற்றும் அரச நிறுவனங்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி- தினகரன்