பட்டதாரிகளுக்கு பல கட்டங்களாக அரசாங்கம் தொழில்வாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்து அதற்கான விளம்பரங்களையும் அரசாங்கம் வௌியிட்டு வரும் நிலையில் இன்னும் அதற்கான விதிமுறைகளை முன்வைக்க அரசாங்கம் தவறியுள்ளது என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க ஒன்றிணைவு என்பன இக்கருத்தை வௌியிட்டுள்ளன.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு உள்வாரி வௌிவாரி பட்டதாரிகளுக்கிடையில் பிரிவு ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஞானாந்த தேரர், சுற்றுநிருபத்தை மீறி இரு வெவ்வேறு வகைகளில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்வாய்ப்பை உரிமையாக கருதி நீண்டகால அல்லது குறுகிய கால தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதுடன் தமது அரசியல் நோக்கு, இலாபத்துக்காக வேலையற்ற பட்டதாரிகளை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கியுள்ள வேலைவாய்ப்பை மீண்டும் ரத்து செய்ய அல்லது மீள பெற அரசாங்கம் தயாராகவுள்ள நிலையில் அவ்வாறு செய்வதற்கு தமது சங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவ்வாறான நிலை தோன்றும் பட்சத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து போராடுவோம் என்றும் தேரர் எச்சரித்துள்ளார்.