ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தும் நியமனம் கிடைக்காத தென் மாகாண பட்டதாரிகளுக்கு இன்னும் சில வாரங்களில் நியமனங்கள் வழங்கப்படும் என்று தென்மாகாண ஆளுநர் நேமால் குணசேக்கர நேற்று (28) தெரிவித்தார்.
போட்டிப்பரீட்சை தோற்றி சித்தியடைந்த பட்டதாரிகளில் ஒரு பகுதியினருக்கு இம்மாதம் 27ம் திகதி நியமனம் வழங்கபட்ட நிலையில் இதுவரை நியமனம் கிடைக்காதவர்கள் ஆளுநரை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதையடுத்து கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.
எம்மோடு போட்டிப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த ஒரு பகுதி பட்டதாரிகளுக்கு இம்மாதம் 27ம் திகதி நியமனம் வழங்கும் நிகழ்வு வெலிகம நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. எனினும் நியமனம் வழங்குவதாக கூறப்பட்ட எண்ணிக்கையை விடவும் குறைந்த எண்ணிக்கையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமனங்கள் எவ்வித வௌிப்படைத் தன்மையுமற்ற நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இது எமக்கிழைக்கப்பட்ட அநீதியாகும். அது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடவே நாம் இன்று வருகைத்தந்துள்ளோம்.
இரண்டாம் கட்ட நியமன வழங்கல் தொடர்பில் உறுதியாக எதுவும் கூற முடியாது என்பதே இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. தென் மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோருக்கு இனி எப்போது நியமனம் வழங்கப்படும் என்று தெரியாது. எனினும் போட்டிப்பரீட்சை தொடர்பில் வர்த்தமானியில் வௌியிடப்பட்டபோது ஐந்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதற்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். எனினும் இப்போது ஐந்தாயிரம் பேருக்கு வழங்க முடியாது என்று ஆளுநர் உட்பட அதிகாரிகள் கூறுகின்றனர்.
எமது கோரிக்கையெல்லாம் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதே. அதிக எண்ணிக்கையான வெற்றிடங்கள் வலய பாடசாலைகளில் உள்ளன. நியமனங்கள் வழங்குமாறு கோருவது போன்றே எமது பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துக்கொள்ளும் உரிமையும் எமக்குண்டு. உடனடியாக எமது பரீட்சை பெறுபேறுகளையும் வௌிப்படுத்துங்கள் என்று பட்டதாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்