தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மட்டுமல்ல அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தையும் அங்கீகரிப்பதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அண்மையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாகவது.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை இன்னமும் கீழ் மட்டத்திலேயே இருக்கிறது. எல்லாவிதமான குறைப்பாடுகளும் அங்கு தலைவிரித்தாடுகின்றன.
தோட்டப்பகுதி மக்களையும் எமது சகோதரர்களாக ஏற்று செயற்படுவதைவிடுத்து, அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மக்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு எந்தவிதத்திலும் போதுமானதாக இல்லை. வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல சமூக வாழ்க்கை நிலையும் (சமூக அந்தஸ்த்து) கீழ்மட்டத்தில்தான் உள்ளது.
கொழும்பில் பங்களாவொன்றில் வேலை செய்வதற்கு ஆள் தேவையெனில், தோட்டப்பகுதி பிள்ளையொன்று இல்லையா என கேட்கின்றனர்.
ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதற்கு ஆள் தேவையெனில் தோட்டப்பகுதியிலிருந்து பையன் ஒருவரை தேடிக்கொள்ள முடியாதா என கேட்கின்றனர்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு எங்கே சமூக அந்தஸ்து வழங்கப்படுகின்றது?
நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியும் அவர்களின் வாழ்க்கைநிலை கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மட்டுமல்ல அவர்களி சமூகநிலையையும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.
அவர்களும் இந்த நாட்டு பிரஜைகளே, அவர்களுக்கும் எங்களுக்கும் என்னவேறு பாடு இருக்கின்றது? இந்நாட்டின் சம உரிமைகளை அனுபவிக்கின்ற மக்களாக அங்கீகரிப்போம் என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.