சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 18 முகாமைத்துவ சங்கங்கள் இன்று (23) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
நிறைவேற்றுத்தர படியாக நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபாவினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது. ஏற்கனவே அரச சேவையில் உள்ள பலர் தமது சம்பள முரண்பாடுகள் தொடர்பில் போராடி வரும் நிலையில் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றமையினால் ஏனைய உத்தியோகத்தர் சம்பளத்திற்கும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் சம்பளத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்படும். எனவே ஏனையோருக்கும் உரிய சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே முகாமைத்துவ சங்கங்கள் இன்றைய தினம் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இப்போராட்டத்தில் அகில இலங்கை நிருவாக உத்தியோகத்தர் சங்கம், இணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, கிராம உத்தியோகத்தர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைதொடர்பு ஒழுங்கமைப்பு உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சங்கம் உட்பட 18 சங்கங்கள் இத்தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளன என சங்கச் செயலாளர் ச. தயாபரன் தெரிவித்துள்ளார்.
தமது போராட்டத்திற்கு கைகொடுக்க அனைவரையும் முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.