கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிபர் சேவைத் தரம் III நியமனங்களுக்கான பெயர்பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிபர் சேவைக்கான இறுதிப் பட்டியலில் 1,858 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் 1,700 பேர் சிங்கள மொழி மூலம் அதிபர் சேவைக்கு தகைமை பெற்றுள்ளனர். தமிழ்மொழியில் மிகவும் குறைவானவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் அல்லாமல் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தபட்டே தேர்வு இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த ஆட்சேர்ப்பு முறையானது அதிபர் சேவை பிரமாண குறிப்பை பின்பற்றாமல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்நியமனம் வழங்களில் தமிழ் பாடசாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ் அநீதியை நிவர்த்தி செய்வதானால் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவே வேண்டும்.
ஆகவே இது விடயத்தில் என்னால் இயன்ற உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.