நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தமது கடமையைக் கைவிட்டுச் சென்றவர்களாகக் கணிதப்படுவர் என ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, அறிவிக்காமல் கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து உத்தியோகத்தர்களும் கடமையைக் கைவிட்டுச் சென்றதாக கருதப்படுவதுடன், அது தொடர்பான கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ள்ளார்.
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், இயந்திர சாரதிகள், நடத்துனர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இணைந்து கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்தப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
2,500 உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால், இலட்சக்கணக்கான மக்கள் பெரும் அவல நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன், ரயில்வே திணைக்களமும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டி உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.