
ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது பணிப்புறக்கணிப்பு உட்பட தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே பணியாளர்கள் உள்ளிட்ட அரச பணியாளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தின்போது தாபால் சேவை, தொடருந்து சேவை என்பன தேர்தல்கள் பணிகளுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த நிலையில் அரச பணியாளர்கள் தங்களது போராட்டங்களை கைவிட்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.
நியாயமான தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டத்திற்கு முரணாகாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் உரிமை அரச பணியாளர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில், அதனை மதிக்கின்ற அதேநேரம் அவர்களது பிரச்சினைகளை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.