50 ரூபா கொடுப்பனவை வழங்க அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கததின் பதில் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிக ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குளறுபடியான நிலையில், ஏற்கனவே பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்ட நாளாந்த சம்பளத்துடனான மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தமது தரப்பு எடுத்த முயற்சி இப்போது வெற்றி அடைந்திருப்பதாகவும், இப்போது தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நவம்பர் மாதம் 20 திகதி பெற்றுக்கொடுக்க கோரியுள்ள நிலையில் அதற்கு முன்பதாக வழங்குவதெனில் அனைத்து தொழிற்சங்கங்களின் உடன்பாட்டையும் கோரியிருக்கிறது.
இந்த நிலையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அந்த ஒத்துழைப்பை கோரி மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே, திரும்பிச் செலுத்த தேவையற்ற நாட்சம்பளத்திற்கு மேலதிகமான 50ரூபா கொடுப்பனவை கடந்த கால நிலுவையோடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருந்தோட்ட அமைச்சரின் கடிதம் கிடைக்கப்பெற்ற சகல தொழிற்சங்கங்களும் தமது உண்மையானதும் பூரணமானதுமான ஒத்துழைப்பை இப்போது எழுத்துமூலம் வழங்களினால் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து மாத நிலைவைப்பணமாக சராசரி 5000 ரூபா கடனாக திரும்பிச் செலுத்த தேவையற்ற கொடுப்பனவாக பெற்றுக்கொடுக்க முடியும்.
நேற்றும், நேற்று முன்தினமும் பெருந்தோட்டத்துறை அமைச்சுடனும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடனும் நடாத்திய பேச்சுவார்த்தைகள் ஊடாக இந்த சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கைக்கு இந்த ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக தொழிலாளர் தேசிய சங்கததின் பதில் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலகராஜ் தெரிவித்துள்ளார்.