அரசியல் பழிவாங்கலின் காரணமாக கடந்த காலங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டு அநீதி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு 6 வாரங்களுக்குள் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற புதிய அமைச்சரவையின் கன்னி அமர்வில், ஜனாதிபதி இதனைக் கூறியதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களில் அரசியல் பழிவாங்கலினால் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதற்காக எதிர்வரும் 6 வாரங்களுக்குள் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் கருத்துரைக்கப்பட்டது.
இதேநேரம், நாட்டுக்காக உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்களை அவ்வாறான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கான, சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை யோசனையில் உள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.