வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்கள் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளமையினால் தாம் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப வகுப்பு கணிதம், ஆங்கிலம் மற்றும் உயர்தர வகுப்பு பாட விடயங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சைகள் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 500 ஆசிரியர்களே இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16) நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாணசபை அறிவித்திருந்தபோதும் சில தினங்களுக்கு முன்னர் தற்காலிகமாக நியமனம் வழங்கல் பிற்போடப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியிருந்தது. எனினும் சுமார் 150 – 200 பட்டதாரிகள் நேற்றைய தினம் சப்ரகமுவ மாகாணசபைக்கு விஜயம் செய்திருந்தனர். நியமனம் பிற்போடப்பட்டதற்கான கடிதம் தமக்கு கிடைத்திருக்கவில்லையென அவர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் தமக்கு அரச நியமனம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையினால் தாம் பணியாற்றிய தனியார்துறை வேலைகளையும் ராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
2020 ஜனவரி மாதம் இந்நியமனங்கள் வழங்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். இத்தற்காலிக இடைநிறுத்தத்திற்கு எவ்வித அரசியல் தலையீடும் காரணமல்ல என்று கூறியுள்ள ஆளுநர் எதிர்வரும் ஜனவரி மாதம் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது நல்லதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.