அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், நடைமுறை நிலைமைகளை தாங்கள் புரிந்துகொள்வதாகவும், அதற்காக அதனை அரசாங்கம் தவறாக கருதிவிடக் கூடாது என்றும் ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.எட்டியாராச்சியினால் சுற்றறிக்கை ஊடாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தர நிலமைகளுக்கு அமைய, கடந்த முதலாம் திகதி முதல் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரச சேவை நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி,
அனைத்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கும் தர நிலைகளுக்கு அமைய, மூவாயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரையான வேதன அதிகரிப்பு கடந்த ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த தீர்மானத்தை இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்பபடுத்துவதற்கும் கடந்த ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சருடன் கலந்துரையாடினோம்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், தற்போது பாதீட்டு யோசனை ஒன்று முன்வைக்கப்படவில்லை என்பதனால், முறையான ஒதுக்கீடு இன்றி இதனை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனவரிமாதம் அந்த கொடுப்பனவை வழங்குவதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி, அடுத்த பாதீட்டின் பின்னர் அந்தக கொடுப்பனவை வழங்குவதாக அமைச்சர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் வென்றெடுத்த தங்களின் உரிமை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
எனினும், நடைமுறை நிலைமைகளை தாங்கள் புரிந்துகொள்வதாகவும், அதற்காக அதனை அரசாங்கம் தவறாக கருதிவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.