பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரி அக்கரப்பத்தனையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல பாகங்களில் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளி என கூறப்படும் இவர்கள் 72 வருடங்கள் நாடு சுதந்திரம் பெற்றிருந்தாலும் தேயிலை மலையில் தொழில் செய்யும் இவர்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும்பாக இருப்பதுடன், உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அரசாங்கம் வழங்காமல் சுதந்திரம் அற்ற சமூகமாக இருப்பதினை கண்டித்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட மேற்பிரிவு குடியிருப்பு பகுதியில் 04.02.2020 அன்று தேசிய கொடியினை வைபவ ரீதியாக முழு கம்பத்தில் ஏற்றி பறக்கவிடப்பட்டு அதன்பின் கண்டனம் தெரிவித்து அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை இத்தோட்ட தொழிலாளியின் பிள்ளையான சுப்பையா சத்தியேந்திரா என்ற நபர் தனியாக முன்னெடுத்துள்ளார்.
இதன்போது போராட்டகாரர் கருத்து தெரிவிக்கையில்,
நாடு 72 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்திருந்தாலும் கூட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குெ முறையான சம்பளம், உரிமை போன்றவை இன்னும் உரிய முறையில் கிடைக்கப்பெறாமல் வாழ்ந்து வருகின்றனர்.
நான் பல போராட்டங்களை இம்மக்களுக்காக செய்துள்ளேன். அன்று முதல் நான் கூறி வருவது இம்மக்களை ஏமாற்றாமல் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாமல் ஆக்கி பாராளுமன்றத்தில் இதற்கென ஒரு பொறிமுறையை உருவாக்கி அதனூடாக இவர்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
ஓரிரு தொழிற்சங்கங்கள் மாத்திரம் இதனை பற்றி பேசாமல் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆகவே இனிவரும் காலங்களில் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சகல அமைச்சுக்கும் கோரிக்கை மனுவினை நான் வழங்குவேன். அவர்கள் 8 நாட்களுக்குள் முடிவு தராவிட்டால் நாடாளவீய ரீதியில் பல போராட்டங்களை முன்னெடுப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.