அரச கணக்காய்வு குழு 2018ஆம் ஆண்டில் அரச, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 ஐ மதிப்பீடு செய்துள்ளது. அதில் தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்கள் 109இற்கு விருதுகள் வழங்கப்பட்டன. 55 நிறுவனங்கள் தங்க விருதுகளையும், 23 நிறுவனங்கள் வெள்ளி விருதுகளையும் மற்றும் 31 நிறுவனங்கள் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டன. திறமைகளை வெளிக்காட்டிய நிறுவனங்களுக்கு தங்க விருது ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
அரச கணக்காய்வு குழுவின் நோக்கம், அரச ஊழியர்களை சட்டத்தினால் கட்டி வைப்பதல்ல என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தின் நிதி கண்காணிப்புக்கு உட்படும் அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய வகையில் மதிப்பீடு இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முன்வைக்கப்படும் பிரச்சினைகளும் புதுப்பிக்கப்படுதல் வேண்டும். தனியார் துறையினர் தமது நிறுவனங்களை நிர்வகிக்கும்போது பின்பற்றப்படும் முறைமைகளை உதாரணமாகக் கொள்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
நிர்வாக ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் அரச நிறுவனங்களின் பல்வேறு போராட்டக் குழுக்கள் வருகின்றன. இதனால் தமது கொள்கையை செயற்படுத்துவதற்கு பதிலாக போராட்டக்காரர்களுக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இறுதியில் போராட்டக் குழுக்களுக்கான தீர்வை வழங்கும் பொறுப்பை குறித்த அமைச்சுக்கள் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்கள் நிதி தொடர்பாக பூரண அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. சில அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற நிதி மோசடிகள் தொடர்பாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாடாளுமன்றம் அனுமதித்த செலவுகளை மீறி கொடுக்கல் வாங்கலில் மோசடிகள் இடம்பெறும்போது அரச சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளதா என தெளிவுபடுத்தும் முக்கியமான பொறுப்பு அரச கணக்காய்வு குழுவுக்கு உள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.