போராட்டத்திற்காய் உதித்த மகளிர் தினம்

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான – புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் தோன்றியது நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான்….

1975 ஆம் ஆண்டுதான் இந்த தினத்தை சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

ஆனால், இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் (ஊடுயுசுயு ணுநுவுமுஐN). கோபன்ஹேகனில் 1910ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து 1911 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியாஇ டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011ஆம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 108-வது பெண்கள் தினம்.

‘ஒவ்வொருவரும் சமமானவர்கள்’
#IWD2020 #EachforEqual என்ற தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.

பெண்களின் உரிமைகள் என்னும் பொழுது அனைத்து வயதிலுமுள்ள பெண்களையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.ஒவ்வொரு விடயத்திலும் ஆண்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகளிலிருந்து பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் வேறுபடுகின்றன.

சில துறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்பட்டாலும் ஏராளமான துறைகளில் அவர்களின் செல்வாக்கு மழுங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பெண்கள் மனதளவும் உடலளவும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன. பாலியல் பலாத்காரம், பாலியல் இலஞ்சம் போன்ற பலவிதமான இன்னல்களுக்கு பெண்கள் முகங்கொடுத்து வருகின்ற சம்பவங்கள் இன்னுமே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாதிக்கும் பெண்கள்

இன்றைய காலத்தில் பெண்கள் தங்களது அயராது முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

தற்போதைய பெண்கள் சமுதாயம் ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, பொலிஸ்துறை, இலக்கியத்துறை போன்றவற்றில் வெற்றி நடைபோட்டு வருததைக் காணக் கூடியதாக உள்ளது. இது பெண்களின் உச்சக்கட்ட வளர்ச்சியையே எடுத்தியம்புகின்றது.

ஆனாலும் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றின் தகவலில் ஒரு முக்கியமான ஒரு விடயம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, உலகளாவிய ரீதியாக குறைந்தது 90 சத வீதமானவர்கள், பெண்களுக்கு எதிரான பக்கச்சார்பு தன்மையை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

75 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பாலின சமூக விதி முறைகள் தொடர்பான ஆய்வொன்றில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 50 சத வீதமான ஆண்கள், பெண்களைவிட தமக்கே அதிக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

உலகில் உள்ள எந்த நாட்டவரும் பால் சமன்பாட்டிற்கு ஆதரவினை வழங்குவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பதவியில் உள்ள பெண்கள், ஆண்களைவிட குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 40 சதவீதமான மக்கள், வர்த்தக நிறைவேற்று அதிகாரிகளாக பெண்களைவிட ஆண்களே சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான தன்மை மற்றும் தவறான கருத்துக்கள் குறித்த தடைகளை துரித கதியில் அகற்றுவதன் மூலமே பெண்களின் சமன்பாட்டினை ஸ்தாபிக்க முடியும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் பாலியல் குழுவின் இயக்குனர் ரக்குவேயில் லகூனாஸ் தெரிவித்துள்ளார்.

பெண்களை அதிகம் பாதிக்கும் வேலையில்லா பிரச்சினை

இலங்கையில் வேலையில்லா பிரச்சினை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளதாக குடிசன கணக்கெடுப்பு மற்றும் புள்ளியிய ல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நான்காவது காலாண்டு புள்ளி விபரங்களுக்கு அமைய பெண்களில் 7.1 சத வீதமானவர்கள் வேலையற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில் 3.2 சதவீதமான ஆண்கள் வேலையற்றதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பிரிவில் 44.7 சதவீதமான பெண்கள் பணியாற்றும் அதேவேளை, நகர பகுதிகளில் 33.8 சதவீதமான பெண்கள் பணியாற்றுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் 90 வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

அவர்களில் தொழிலில் ஈடுபடும் பெண்களும் கல்வி கற்கும் பெண்களுமே அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நிலைமைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பெண்கள் எக்காலத்திலும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். ஆண்களுக்கு நிகராக அனைத்து ஆளுமைகளையும் அவர்கள் கொண்டுள்ளனர் என்பதை எவரும் மறந்து விடலாகாது. எனவே பெண்களை சரிநிகராக பேணும் சமுதாய அமைப்பு என்று தோற்றம் பெறுகிறதோ அன்றுதான் மகளிர் தினம் கொண்டாட்டத்திற்குரிய நாளாக இருக்கும். அதுவரை மகளிர் உரிமைக்கான
போராட்டத்தில் அனைவரும் முன்னிற்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435