பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தமக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான PCR அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் கட்டுநாயாக்க விமானநிலையத்தில் PCR சோதனை மேற்கொள்வது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (04) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திரி ஒருவர், விமான நிலையத்தில் வைத்து PCR சோதனையை மேற்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியன்னா மாநாட்டு உடன்படிக்கைக்கு அமைய, இராஜதந்திரிகளுக்கு பல்வேறு சலுகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயினும் கொரோனா பரவல் நிலையில் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில், பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.