இலங்கை திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விமானமொன்றை ஏற்பாடு செய்யுமாறு சைப்பரஸில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ள இலங்கையர்களே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சைப்ரஸுக்கான இலங்கை கொன்சியுலர் அலுவலகத்தில் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்து 200 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் சிங்கள நாளிதழான லங்காதீபவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான விமானத்தை ஏற்பாடு செய்ய கொன்சியுலர் காரியாலயம் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவ்விலங்கையர்கள், தாம் வேறு விமானங்களில் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளதாகவும் கொன்சியுலர் காரியாலயம் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு திரும்பியனுப்ப முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதிலும் தற்போது அதனையும் கைவிட்டுள்ளது என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
350 யுரோ செலவிட்டு தாம் வேறு விமானங்களில் டிக்கட்டுக்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவ்விலங்கையர்கள், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினூடாக ஏற்பாடு செய்யப்படும் விமானத்திற்கு தாம் 800 யுரோ வரை செலவு செய்யவேண்டியிருக்கும். இவ்வாறான அனர்த்த சூழ்நிலையில் அந்தளவு மேலதிக பணம் தம்மிடம் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் 19 தொற்றுக்கு முன்னரே தமக்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய்தவர்களும் தம்மிடையே உள்ளனர். நோய் வாய்ப்பட்டவர்கள், தமது தாய்தந்தையின் மரண வீட்டுக்கு செல்ல ஆயத்தமானவர்கள் போன்றோரும் எம்மிடையே உள்ளனர். கட்டார் விமான சேவையினூடாக கலந்துரையாடி தம்மை நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவ்விலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.