விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகள் பிரதேச செயலகத்திற்கு செல்வதற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 17ம் திகதி அனுப்பப்படவுள்ளது. எனவே பட்டதாரிகள் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி அருகாமையில் உள்ள பிரதேச செயலகத்திற்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக பிற்போடப்பட்ட ஐம்பதாயிரம் பட்டதாரிகள் மற்றும் ஒரு இலட்சம் குறைந்த வருமானமுடையவர்களுக்கான நியமனம் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவுக்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் நாளை (16) ஜனாதிபதி செயலக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் செயற்றிட்டம் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள படையணியினால் செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.