கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 5 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இணையதளங்களில் விளம்பரங்களை பிரசுரித்து, அதற்கு பதிலளிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்களுக்கு பதிலளிப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டு, பணச்சலவை செய்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகளுக்கு அமைய, அதன் கணினி பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெண் ஒருவர் போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, திட்டமிடப்பட்ட முறையில் இந்த பாரிய மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பாகங்களை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளதுடன், அது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தற்போதும் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, ராகம, கந்தான, நிட்டம்புவ, காலி, அநுராதபுரம், கிரிவுல்ல முதலான பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சிக்கியவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் இணையதள முறைமை ஊடாக வேறு கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், கந்தான, கற்குளம், மாரவில, ரந்தொலுகம, மெல்சிறிபுர முதலான பகுதிகளை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அடுத்த மாதம் 4 ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள், 0112 32 69 79 என்ற தங்களது அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.