கொரோனா சூழலில் வாழ்ந்து, நாம் வைரஸை தொற்றிக்கொள்ளாமல், நம்மிலிருந்து மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தாமல் வாழும் முறைமைதான் இன்று (09) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காரியாலயங்கள், நிறுவனங்கள் செயற்படவேண்டிய முறைமை தொடர்பில், அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள காரியாலயங்கள் உள்ளிட்ட ஏனையவை திறக்கப்படும். காரியாலயம் ஒன்று திறக்கப்படுமாயின் 2020.10.15 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
- காரியாலயம், விற்பனை நிலையம், சிறப்பு அங்காடிகள் என்பனவற்றை திறக்கும்போது, சமூக இடைவெளியை பேணக்கூடிய அளவிலான தரப்பினரை மாத்திரமே குறித்த பகுதிக்குள் அனுமதிக்கவேண்டும். அதற்கு அதிகமானவர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
- தொடர்ச்சியாக கைகளைக் கழுவுவதற்கும்
- உடலின் வெப்பநிலையை பரிசோதிப்பதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
- வருகை தருபவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரித்து வைத்திருக்க வேண்டும்.
- மேசைகள், கணினிகளின் ஏற்பாடுகளும் சமூக இடைவெளிக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.
- 55 நிறுவனங்கள் செயற்படவேண்டிய முறைமை தொடர்பில் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் ஒழுங்குவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பொதுவான ஒழுங்கு விதிகளுக்கு அப்பால், இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்றி அந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.
- இந்த நடைமுறைகளுக்கு அமைய செயற்படாவிட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக கருதி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
- முகக்கவசம், அணிதல் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்படுவதற்கு நிறுவனங்களின் பிரதானிகளினால் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது கண்காணிக்கப்படும்.
- நிறுவனங்களுக்கு வருகை தருபவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் போது போலியான தகவல்கள், குறிப்பாக பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், விலாசம் என்பன உள்ளீடு செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
- பெற்றுக்கொள்ளப்படும் அனுமதிப்பத்திரங்களில் சிலர் மாற்றங்கள் ஏற்படுத்தி போலியான அனுமதிப்பத்திரங்கள் தயார் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
- ஒரு விண்ணப்பப்படிவத்தில் போலி தகவல்களை உள்ளீர்ப்பது அல்லது தகவல் கோப்புக்குள் உள்ளீர்ப்பது, போலி ஆவணத்தை தயாரித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகுதலாகும்.
- இந்த குற்றமானது ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
- ஒருவர் தனது பெயரைத் தவிர்த்து மற்றவருடைய பெயரையோ அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையோ பதிவுசெய்வாராயின், மற்றவராக தோன்றி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அவர் உள்ளாவார்.
- அது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
- எனவே, போலியான தகவல்களை வழங்க வேண்டாம். அவ்வாறு செய்வது தனிமைப்படுத்தல் சட்டத்தை மாத்திரமன்றி, நாட்டின் குற்றவியல் சட்டத்தை மீறும் குற்றமாகும்.
நாளை (09) முதல் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிவில் உடையில் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.