தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு என்ற அடிப்படையில் தாங்கள் இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நிலைமை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார செயலாளர் தலைமையில் கடந்த வாரம் தொழில்நுட்பக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது. தற்போது உலகில் பல தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்திலேயே உள்ளன. அவை தொடர்பில் எங்கும் இறுதித் தீரமானம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அனைத்து விடயங்கள் குறித்து ஆராயந்த பின்னரே தாங்கள் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதாக சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பும் எதனையும் பரிந்துரை செய்யவில்லை. இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தங்களால் தடுப்பூசி வழங்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், அது எந்த தடுப்பூசி என்று எமக்கு தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், எதனைவும் செயற்படுத்துவதற்கு முன்னதாக இலங்கையின் சுகாதார திணைக்களம் என்ற அடிப்படையில் தாங்கள் நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.