ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000 மில்லியன் ரூபா நட்டம்

ஊழியர் சேமலாப நிதியம் என்பது தனியார் துறையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தமது வாழ்நாளில் எஞ்சிய காலப் பகுதியை இலகுபடுத்திக்கொள்வதற்காக சேமிக்கும் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிதியமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காகவே இந்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள மக்களின் பணத்தை பல்வேறு தரப்பினரும் இலாபமீட்டும் வகையில் முதலீடு செய்ததால், அந்த நிதியத்திற்கு நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டளவில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாகவே நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த நிதியம் பங்குச்சந்தையில் தமது முதலீடுகளை மூன்று வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 83 நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் 84,000 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதுடன், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அதன் பெறுமதி 45,000 மில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் முதலீடு செய்துள்ள தொகை 9,600 மில்லியன் ரூபாவாகும்.

இதன் பெறுமதி 9,500 மில்லியன் ரூபா வரை தற்போது குறைவடைந்துள்ளது.

The Finance நிறுவனத்தின் வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டதால் மாத்திரம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த பெறுமதி 2,54,000 மில்லியன் ரூபாவைக் கடந்திருந்தது.

தனியார் துறையில் தொழில் புரியும் மக்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட பணத்தைக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தை சூறையாடும் செயற்பாடு இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல.

1958 ஆம் ஆண்டு நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட நாள் முதல் அரச பிணை முறிகளில் முதலீடு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1998 ஆம் ஆண்டிலிருந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் 2010 ஆம் ஆண்டு முதல் நிதியத்தின் ஐந்து வீதத்திற்கும் மேற்பட்ட பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.

பங்குச்சந்தையில் செயற்கையான முறையில் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சிலருக்கு மாத்திரம் இலாபம் கிடைக்கும் செயற்பாடு இந்த காலப்பகுதியிலேயே இடம்பெற்றது.

சில நிறுவனங்கள் பங்குச்சந்தை பட்டியலில் இணைக்கப்பட்டதுடன், அவற்றின் பங்குகளின் விலைகள் செயற்கையான முறையில் அதிகரிக்கப்பட்டன.

பங்குகளின் விலைகளை செயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு பல்வேறு உபாயங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நாட்டின் பிரபல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களைப் பயன்படுத்தி பாரிய வர்த்தக செயற்பாடுகளாக காண்பிக்கும் நோக்கில் வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பின்னர் நண்பர்கள் சிலர் மாத்திரம் இணைந்து சடுதியாக பங்குச்சந்தையில் விலைகளை செயற்கையான முறையில் அதிகரிப்பதற்கான வழிமுறை ஏற்படுத்தப்பட்டது.

சிறந்த முதலீடு என சந்தை ஊடாக தகவல்களை வழங்கியதன் பின்னர் அதனூடாக ஈர்க்கப்படும் முதலீட்டாளர்களுக்கு தமது சகாக்களின் பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதே இந்த போலி வர்த்தக செயற்பாடுகளின் நோக்கமாக இருந்தது.

இதன்போது அநேகமான சந்தர்ப்பங்களில் ஊழியர் சேமலாப நிதியம் பலிகடாவாக்கப்பட்டது.

கோழிகள் இல்லாத கோழிப் பண்ணைகள், கட்டடம் இல்லாத ஹோட்டல் நிறுவனங்கள், காணிகள் கூட இல்லாத நிறுவனங்களும் இதன்போது உருவாக்கப்பட்டன.

இலாபமீட்டும் செயற்பாடு ஒருபுறமிருக்க, பெயர்ப்பலகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததன் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் பணம் ஒரு சிலரது சட்டைப்பைக்குள் சென்றதுடன், சிறு முதலீட்டாளர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மிகவும் குறுகிய காலத்திற்குள் பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் நிறுவனமான பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டமை இந்த தவறான கொடுக்கல்-வாங்கலின் அளவை பிரதிபலிக்கின்றது.

அப்போதைய ஜனாதிபதியின் செயாளர் லலித் வீரதுங்கவின் மனைவி இந்திராணி சுகததாஸ மற்றும் திலக் கருணாரத்ன ஆகியோர் இதற்கு உதாரணமாக உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் பங்குச் சந்தையில் இடம்பெற்ற ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்தாலும் அதனால் ஏற்பட்ட பிரதிபலனைக் காண முடியவில்லை.

மாறாக இடம்பெற்றது என்ன?

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் சூறையாடப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் அன்று முதல் பிணை முறிகளில் முதலீடு செய்யப்பட்டு கொள்ளையிடப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற உடனேயே மத்திய வங்கியை நிதி அமைச்சிலிருந்து அகற்றி, தாமே பொறுப்பேற்றதுடன் தமது நண்பரான அர்ஜுன மகேந்திரனை ஆளுநர் பதவிக்கு நியமித்தார்.

இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களில் மத்திய வங்கியின் ஆளுநரின் மருமகனான அர்ஜுன் அலோசியசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு சாதகமான வகையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது.

மத்திய வங்கியில் நேரடியாக முறிகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், ஊழியர் சேமலாப நிதியம் இரண்டாம் நிலையின் ஊடாக கூடுதல் விலைக்கு முறிகளைக் கொள்வனவு செய்தது.

இது ஓரிரு தடவைகள் அல்லாமல் பல தடவைகள் இடம்பெற்றதுடன், இதுவரை வெளிவந்துள்ள விடயங்களுக்கு அமைய இந்த ஊழல் மூலம் ஏற்பட்ட நட்டம் 8500 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்டதாகும்.

ஓய்வூதியக் காலத்திற்காக சேமிக்கப்படும் பணம் திருடப்படுவதை தடுப்பதற்காகவே கட்டுநாயக்கவில் ரொஷேன் சானக்க போன்றவர்கள் உயிரையும் துச்சமாகக் கருதி போராடினர்.

இந்த நிலையில், தனியார் துறையினரின் ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 39,000 மில்லியன் ரூபா சூறையாடப்பட்டுள்ளது.

இங்கே சில விடயங்களை மாத்திரமே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பங்குச் சந்தையில் சில காலம் போலி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் தமது கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளதைக் காண முடிகிறது.

இது தொடர்பில் உழைக்கும் வர்க்கத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?

மூலம் – நியுஸ் பர்ஸ்ட்- பெல்லா டலீமா

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435