
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பேச்சுவார்த்தை தொடர்பில் இறுதி முடிவொன்று எடுக்கப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்களில் ஒன்றான, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த வாரம் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலாம் வருடத்தில் 625 ரூபாவை அடிப்படை சம்பளமும், இரண்டாம் வருடம் முதல் அதனை 25 ரூபாவினால் அதிகரிக்கவும் முதலாளிமார் சம்மேளனம் கடந்த வாரம் இணக்கம் வெளியிட்டிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழிலமைச்சர் தயா கமகே முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் கடந்தவாரம் தனித்தனியே கலந்துரையாடலை நடத்தினர்.
முதலாவதாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் 625 ரூபா அடிப்படை சம்பளம் என்ற நிலைப்பாட்டை முதலாளி சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
இந்த அடிப்படை சம்பளமானது முதல்வருடத்தில் 625 ரூபாவாகவும் இரண்டாம் வருடம் முதல் அதனை 25 ரூபாவினால் அதிகரிக்கவும் முதலாளிமார் சம்மேளனம் தமது தீர்மானத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.