தொழிலாளர் வர்க்கத்தை தொடர்ந்து கூட்டு ஒப்பந்தமென்ற பேரில் ஒடுக்குமுறைக்கு, அடக்குமுறைக்கு உள்ளாக்கி அவர்களின் உழைப்பை சுரண்டு அடிமை சாசனமான கூட்டு ஒப்பந்தமுறை ஒழிக்கப்படும்வரை சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
முதலாளித்துவத்துக்கு சோரம்போக்கும்; தொழிற்சங்கங்களால் 1994ஆம் ஆண்டு முதல் கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தவரை ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 10 சதவீதத்திற்கும் குறைவான சம்பள அதிகரிப்புடனேயே இந்த அடிமை சாசனம் கைச்சாத்திடப்பட்டு வந்துள்ளது. கடைசியாக 2016ஆம் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டிருந்த அடிமை சாசனத்தில் 12 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. கூட்டு ஒப்பந்த முறை அமுலாக்கப்பட்ட காலம்முதல் அந்த 12 சதவீதம்தான் உயரிய சம்பள அதிகரிப்பாகவும் காணப்படுபடுகிறது.
இம்முறை இன்னமும்; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. ஆனால், 625 ரூபா அடிப்படை சம்பளத்துடன் அதனைக் கைச்சாத்திடுவதற்கான நகர்வுகள் ஏறதாள இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தொழிற்சங்க அரசியல் முறைமையில் பேரம் பேசுகின்றோம் என்ற பேரில் வெறும் 12வீதம்தான் இவர்கள் பெற்றுக்கொடுத்த மிகவும் அதிகமான சம்பள அதிகரிப்பு சதவிகிதமாக உள்ளது.
தொடர்ந்து இந்த அடிமை சாசனத்தை பேணுவதன் மூலம் யார் நன்மையடைய போகிறது? ஒருபுறத்தில் கம்பனிகள் ஐ.தே.கவின் விரிவுப்படுத்தப்பட்ட நவ லிபரல்வாதத்தில் பாரிய இலாபத்தை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈட்டப்போகின்றன. அதேவேளை, அடிமை சானத்தில் கையொப்பமிடும் பங்காளிகளான தொழிற்சங்கங்கள் தமது அரிசியல் இருப்புக்காக போலிச் பிரசாரங்களை தொடர்ந்து முன்னெடுக்க போகின்றன.
உண்மையில் 1000 ரூபா என்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அரசியல் இருப்புக்கு சொல்லப்பட்ட போலித்தமான அரசியல் பிரசாரம் ஆகும். தற்கால இளைஞர்களும் (நான் உட்பட) அதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் குதித்தமை ஒருபுறம் முட்டாள் தனமாக இருக்கின்ற போதும் என்றும் இல்லாதவாறு இந்த நான்கு, ஐந்து மாதங்களில் மலைநாட்டு இளைஞர்களின் எழுச்சி என்பது சில்லரைத்தனமான அரசியலை முன்னெடுத்து வரும் தொழிற்சங்கங்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த அரசியல் பாடத்தை புகட்டும் அடித்தளமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஓட்டும் ஒரு சனநாயகமான தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கான பல உதாரணங்கள் உலகெங்கும் நிறைந்துக்கிடக்கின்றன.
அரசியலில் கத்துக்குட்டியாகியுள்ள இ.தொ.காவின் பிரதிப் பொதுச் செயலாளர், கூட்டு ஒப்பந்த முறையில் சம்பள விடயத்தை தாண்டி பல விடயங்கள் உள்ளதாகவும், சம்பள விடயத்தை மாத்திரம் வைத்து கூட்டு ஒப்பந்தத்தை ஒழிப்பது தொடர்பில் பேசுவது அர்த்தமில்லை என்கிறார். 1994 ஆம் ஆண்டு முதல் பெண் தொழிலாளர்களுக்காக கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள சரத்துகளில் எத்தனை சரத்துகள் நடைமுறையாகியுள்ளன. பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும், மானியங்களும் எங்கே வழங்கப்பட்டுள்ளன?.
தொழிலாளியின் வரவு குறிப்பிட்ட சதவீதம் இருக்க வேண்டுமென ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது. தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக தொழிலுக்குச் செல்ல முடியாது போனால் அதனை விடுமுறை தினமாக கொள்ளப்படுகிறதா? இல்லை. மாறாக அவரின் வரவு நாட்கள் கணக்கில் குறித்த தினம் கழிக்கப்பட்டு சபளத்திலும் கழிக்கப்படுகிறது. எந்த கம்பனி நட்டத்தில் இயங்குறிது?. நியாயமான வருடாந்த கணக்கறிக்கையொன்று இதுவரை தொழிலாளர் மத்தியில் சமர்ப்பித்து இந்தமுறை எமது கம்பனி நட்டத்தில் இயங்கியுள்ளதென ஏதாவது ஒரு கம்பனி வெளிப்படைத் தன்மையை காட்டியுள்ளதா?. இ.தொ.கா. உட்பட கூட்டு ஒப்பந்தத்தின் பங்காளிகளாக உள்ள தொழிங்சங்கள் அதிலிருந்து வெளியேறி தொழிலாளர்கள் பக்கம் நிற்குமாயின் வெற்றி என்பது கைக்கு எட்டிய தூரத்தில்தான் இருக்கும். ஆனால், அதில் இருந்து அவர்களுக்கு வெளியேற இதயச் சுத்தி இல்லை என்பதே யதார்த்தம். இதிலிருந்து தெளிவாகுவதாவது, தொழிலாளர்கள் மீது இவர்கள் உண்மையான அக்கறை கொள்ளவில்லை என்பதுதான்.
உண்மையில் ஒந்த ஒப்பந்தமுறை பாரதூரமான ஊழல்மிக்க முறைமையாகும். ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டதையும் இந்த கூட்டு ஒப்பந்தமுறையில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதுதான் மறைக்கப்படும் உண்மை. தொடர்ந்து இருக்கமடைந்துவரும் பொருளாதார சூழ்நிலையால் தொழிலாளர்களுக்கு 1000ஆயிரம் ரூபா அல்ல அதற்கு மேல் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தொழிற்சங்க அரசியலின் பிற்போக்குவாதத்தாலும் காலங்காலமாக தமது சுயலாப அரசியலாலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுகின்றமை மாத்திரமே நிதர்சனம். தொடர்ந்து தொழிலாளர்களை ஏமாற்றும் இந்த அடிமை சாசனம் ஒழிக்கப்படும்வரை சம்பளப் பிரச்சினைக்கு தீர்வொன்று வரப்போவதில்லை. இம்முறை அடிமை சாசனம் கைச்சாத்திடுவதை தடுக்க முடியாது போனாலும் அடுத்தமுறை அரசின் முழுமையான பங்களிப்புடன் கூடிய முறைமையொன்றை பெருந்தோட்ட தொழில்துறைக்கு அறிமுகப்படுத்தும் செயற்பாட்டுக்காக இளைஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
ஒரு நாட்டின் மிகப் பெரிய தொழில்படை முகங்கொடுக்கும் பிரச்சினைகளை எவ்வாறு ஒரு அரசு வேடிக்கை பார்க்க முடியும். ஆனால், கூட்டு ஒப்பந்த முறை அமுலுக்கு வந்தது முதல் அரசு ஒரு வேடிக்கையாளனாகவே இருந்துவருகிறது. அதனால்தான் இன்று பெருந்தோட்டத் தொழில்துறையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் 30ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்படை குறித்த தொழில்முறையிலிருந்து மாற்றுத் தொழிலை நோக்கி நகர்கிறது.
எனவே, இந்த முதலாளித்துவ முதலைகள் தொழிலாளர்களை விழுங்க முன்னர் அவர்களையும் அந்த தொழில்துறையையும் பாதுகாக்க அரசின் முழுமையான பங்கேற்புடன் கூடிய முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கு மலைநாட்டு இளைஞர் படை அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என்பதுடன், தொழிலாளர்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ள தொழிற்சங்களும் ஆக்கப்பூர்வமான அரசியல் நகர்வுகளில் ஈடுபட வேண்டும்.
வழிமூலம்: malainaadu.com
சு.நிஷாந்தன் (ஊடகவியலாளர்)