வேதனமும் வேடிக்கை மனிதர்களும்

தீவிர வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்பதை உலக வங்கியானது சுட்டிக்காட்டும் போது 1.90 டொலர்களுக்கு கீழான நாளாந்த வருமானத்தை பெறுபவர்களே அவர்கள் என்று கூறுகின்றது.

இது இலங்கைக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் பொருத்தமான புள்ளி விபரமாகும். இலங்கை பெறுமதியைப்பார்க்கும் போது அது 350.17 ரூபாயாக விளங்குகிறது. இந்த தொகையை வருமானமாக பெறுபவர்கள் 30 நாட்கள் வேலை செய்தாலும் மாதம் அவர்களுக்குக் கிடைப்பது 10,500 ரூபாயாகவே இருக்கும். ஆனால் நாட் சம்பளமாக 750 ரூபாயை பெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானமும் மாத முடிவில் இதே தொகையாக இருப்பதற்கு என்ன காரணம்?

இதை தொழிற்சங்கங்கள் எப்போதும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. வருடத்துக்கு எல்லா மாதங்களிலும் கொழுந்து கிடைப்பதில்லை. எல்லா தோட்டங்களிலும் மாதம் 20 நாட்களாவது வேலை வழங்கப்படுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் 10 தொடக்கம் 15 நாட்கள் வேலை வழங்குவதே சில தோட்டங்களில் சவாலாக இருக்கின்றன. இந்த நாட்டில் எல்லா மக்களுக்கும் விலைவாசி ஒன்றாகத்தான் இருக்கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு கிலோ 60 ரூபாயாக இருந்த அரிசி தற்போது 95 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. ஆனால் தொழிலாளர்களின் வருமானம் அப்படியே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இந்த வர்க்கத்தினரை ஒரு வேடிக்கை பொருள் போன்று வைத்து ஒரு பக்கம் தொழிற்சங்கங்களும் மலையக கட்சிகளும் வாக்குகளை பிடிங்கிக்கொள்கின்றன. மற்றொரு பக்கம் கம்பனிகள் உழைப்பை சுரண்டிக்கொள்கின்றன. மேற்கூறிய இரண்டு தரப்பாலும் அனுகூலத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெற்று வரும் அரசாங்கமோ வாக்குறுதி என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி வருகின்றது.

அப்படியானதொரு ஏமாற்றம் கடந்த ஐந்து வருட வரவு செலவு திட்டங்களிலும் பிரதிபலித்து வருகின்றது என்றால் 2021 ஆம் ஆண்டு மட்டும் அது சாத்தியமாகவா போகின்றது?

வருமானம் கூடினால் தொழிற்சங்கங்கள் தேவையில்லை?

தொழிலாளர்களின் வேதனத்தை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவிப்பு அதைத் தொடர்ந்து இவ்வருடம் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதன் பிறகு பாராளுமன்றில் அது குறித்து இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்கள் ஒன்றுமே முதலாளிமார் சம்மேளனத்தை பாதிக்கவில்லை என்பதாகும்.

ஆரம்பத்தில் முத்தரப்பு ஒப்பந்தமாக இருந்த தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் பின்பு இருதரப்பாக மாறி நெடுநாட்களாகின்றன. மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் பொது கூட்டு ஒப்பந்தம் என்ற அம்சம் இல்லாதொழிந்து போய் இப்போது சம்பளத்துக்காக மட்டுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. இது இவ்வாறு இருக்கையில் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவினால் நாட்டின் 75 ஆவது வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் போது கூறப்பட்ட அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் என்ற விடயம் பற்றி அரசாங்க தரப்பிலிருக்கும் மலையக கட்சிகளின் இரண்டு உறுப்பினர்களால் கூட தெளிவுபடுத்த முடியாத நிலையே உள்ளது.

ஏனென்றால் அத்தொகை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்க முடியாதுள்ளது. அதற்கு பிரதான காரணம் தற்போதைய சூழ்நிலையில் கம்பனிகள் வலுப்பெற்றிருப்பது, பேரம் பேசக்கூடிய ஆளுமை உள்ள கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கவாதிகள் எவரும் இல்லாமை, நாட்டின் கொரோனா நெருக்கடி நிலைமை போன்றவற்றை கூறலாம். மாறாக ஆயிரம் ரூபாயை தருகிறோம் என இது வரை கம்பனிகள் கூறவில்லை. அதற்கு மேல் தொழிலாளர்கள் நாட் சம்பளத்தைப் பெறலாம் ஆனால் எமது ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் செயல்படுத்தி பார்ப்பதற்கு தயங்குகின்றன. அதற்குப் பிரதான காரணம் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால்  தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் அதற்குப்பிறகு குறித்த தொழிற்சங்கங்களின் தேவை தொழிலாளர்களுக்கு அவசியமற்று விடும் என்ற அச்சமும் அதற்குக் காரணம்.

இதற்கு சிறு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சிறந்த உதாரணமாக விளங்குகின்றனர். இலங்கையில் 75 வீதமான தேயிலை தேவையை பூர்த்தி செய்கின்றவர்களாக சிறு தேயிலை தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் தமக்கு வேதனம் குறைவு என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதில்லை. இவர்கள் பறிக்கும் தேயிலை கிலோவுக்கு 30 ரூபாவே வழங்கப்படுகின்றது ஆனாலும் அவர்கள் நாளாந்தம் ஆயிரம் ரூபா வரை பெறுகின்றனர் என்கிறார் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.எல். குணரட்ன.

அதேவேளை 22 பிராந்திய தேயிலை தோட்ட கம்பனிகளின் கீழ் வரும் சில தோட்டங்களில் ஒரு குடும்பத்துக்கு குறித்த தேயிலைச் செடிகள் கொண்ட நிலத்தை பங்கிட்டு அதன் மூலம் வருமானத்தைப் பெறும் வேலைத்திட்டம் தெனியாய போன்ற பகுதிகளில் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லப்படுவதை உறுதி செய்துள்ள முதலாளிமார் சம்மேளன தலைவர் பாத்திய புலுமுல்ல, இதை நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்க தொழிற்சங்கங்களே தடையாகவுள்ளதாகவும் கூறுகிறார்.

குறைந்த பட்ச சம்பள சட்டத் திருத்தம்

அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் என்ன தான் தவம் கிடந்தாலும் தொழிலாளர்களுக்கு உரிய நாட்சம்பளத்தை கம்பனிகள் வழங்காது அலட்சியப்போக்காக நடந்து கொள்வதை கட்டுப்படுத்த, குறைந்த பட்ச சம்பளத் திருத்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியம் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்.செயலாளரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா தெரிவித்துள்ளார். அவரின் கருத்துப்படி அரசாங்கம் செயற்படுமாயின் சட்டத்தை மீற முடியாத கம்பனிகளும் குறித்த ஆயிரம் ரூபாய் நாட்சம்பளத்துக்கு எந்த வகையிலும் இறங்கி வர வேண்டும்.

2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறைந்த பட்ச கூலிகள் சட்டத்தின் படி ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 400 ரூபாயாகவும் மாதாந்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் சட்டத்தரணி இ.தம்பபையா, அடிப்படை சம்பளத்தை மாற்றி ஆயிரம் ரூபாவாக மாற்ற ஏன் அரசாங்கத்தால் முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்வியை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தான் அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும். ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்க்கைச் செலவு படியை இல்லாமலாக்குவதற்கு ஒத்துழைத்ததும் தொழிற்சங்கங்களே. அதன் விளைவை இன்று வரை அனுபவிப்பது என்னவோ தொழிலாளர்கள் தான். ஆகவே காவடியை தூக்கியவர்களே அதை இறக்கியும் வைக்க வேண்டியுள்ளது.

கொரோனா நெருக்கடியால் உல்லாசப்பயணத்துறை முற்றாக முடங்கியுள்ளது. இப்போது நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுப்பது தேயிலை ஏற்றுமதியேயாகும். ஆனால் அதைப் பெற்றுக்கொடுக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் நெருக்கடியை அரசாங்கம் கண்டு கொள்ளாமலிருப்பது ஒரு சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும்.

தான் பதவியேற்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மக்களை கண்டுகொள்ளாமலிருப்பது வேதனைக்குரியதே. வேடிக்கைக்குரிய மனிதர்களாக தோட்டத்தொழிலாளர்கள் மட்டும் மாறவில்லை. தொடர்ச்சியாக அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வரும் அரசியல் பிரமுகர்களும் கூட இந்த விவகாரத்தில் வேடிக்கை மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

நன்றி – சிவலிங்கம் சிவகுமாரன்

மூலம் – வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435