அடுத்த வருடம் அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து அதிபர்களை அறிவுறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலஞ்சம் , ஊழல் மற்றும் வேறு மோசடிகள் இல்லாமல் சுற்றுநிரூபத்தின் பிரகாரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு முடியுமான அனைத்து நடடிவக்கைகளையும் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கல்வி துறைசார் அதிகாரிகளையும் அதிபர்களையும் அறிவுறுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
அடுத்த ஆண்டு முதலாம் வகுப்புக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பணிகளை முன்னெடுக்கும் பாடசாலை நேர்முக பரீட்சை சபையில் அங்கம் வகிக்கும் பழைய மாணவர் சங்க பிரதிநிதி, அபிவிருத்தி சங்கப் பிரதிநிதி, சபையின் தலைவரான அதிபர் ஆகியோர் குறித்த வேலைத்திட்டத்திற்கு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஆரம்ப வகுப்புகள் அல்லாத பாடசாலைகளின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் (கல்வி நிர்வாக) ஆகியோரும் குறித்த வேலைத்திட்டத்துக்கு பங்கேற்க வேண்டும் என கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் தேசிய பாடசாலை அதிபர்களுக்கான வேலைத்திட்டம் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தரணி துஷ்மந்தி ராஜபக்ச, பொலிஸ் உத்தியோகத்தர் டப்ளியு .ஜி. பத்மினி, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி ருவன் சுமேந்திர ஆகியோர் மோசடிகள் இடம்பெறுவதனை தடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கினர்.