ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் தொழிற்சங்க பணியாளர்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈபடுட்டுள்ளனர்.
முன்னதாக திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் கையொப்பத்துடன் 1979 இலக்கம் 61 என்ற அத்தியாவசிய சேவை சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ரயிலை செலுத்துதல், ரயில் மற்றும் ரயில் வழித்தட பராமரிப்பு, உரிய பாதுகாப்பை வழங்குதற்கான சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் வழிநடத்தல், பயணச் சீட்டு வழங்குதல் என்பன உள்ளிட்ட ரயில் திணைக்களத்தின் சேவைக்கு உட்பட்ட சேவைகளுக்காக கட்டாய பணியில் ஈடுபட வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டன.
வேதன பிரச்சினை உட்பட தங்களது பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், வாராந்தம் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணிமுதல் முதல் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ரயில் தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதற்கமைய, வேதன உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமை காரணமாக, குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால், தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட இன்று நள்ளிரவு வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், அத்தியாவசிய சேவை மற்றும் அவசரகால சட்டம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திக்க தொடங்கொட குற்றம் சுமத்தியுள்ளார்.
பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தல், கைதுசெய்தல், பணியிலிருந்து விலக்குதல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து நீடிக்கவும் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகள் இடம்பெறாவிட்டால், இன்று நள்ளிரவு முதல் சேவைக்கு சமூகமளித்து, நாளை தினத்திற்கான ரயில் சேவைகளை முன்னெக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் 79 மில்லியன் ரூபாவை இலங்கை போக்குவரத்து சபை வருமானமாக ஈட்டியிருப்பதாக அதன் பொது முகாமையாளர் டி.ஏச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக கடந்த 21ஆம் திகதி முதல்; 23 ஆம் திகதி வரையில் மேலதிக பேருந்து சேவைகளை ஈடுபடுத்தியதன் மூலம் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.
ரயில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அலுவலக பணிகளில் ஈடுபபவர்கள், ஏனைய பயணிகள், முன்பதிவை மேற்கொண்டிருந்த பயணிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், அஞ்சல் மற்றும் பொதி சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
அரசாங்கம் தங்களது வேதக பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காதமை காரணமாகவே தாங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ரயில் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம், இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்த நிலையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க, ரயில் தொழிற்சங்கத்தினரின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிதி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களின் பிரச்சினைக்கு ஒருமாத கால்ததிற்குள் தீர்வு காணப்படும் என ரயில் தொழிற்சங்கத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. இதையடுத்து, அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால், என்ன நடைபெறும் என்பது அவர்களுக்கும் தெரியும், அரசாங்கம் என்ற முறையில் அது தங்களுக்கு தெரியும்.
அத்துடன், ரயில் தொழிற்சங்கத்தினர் பணிக்கு சமூகமளிக்காமல், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தாங்கள் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இவ்வாறாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றனது. எவ்வாறிருப்பினும், இந்தப் போராட்டம் காரணமாக, பயணிகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக, பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தல், ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் முதலான மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. எனினும், போராட்டத்தில் ஈடுபடுகின்ற ரயில்வே பணியாளரகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலைமை அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம், போராட்டத்தில் ஈடுபடும் ரயில்வே பணியாளர்கள், அரசாங்கத்pற்கு தாக்கம் ஏற்படக்கூடிய வகையில், அதேநேரம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதாக வகையில் நூதனமான முறையில் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
இதற்கமைய, பற்றுச்சீட்டுக்களை இலவசமாக விநியோகித்து, அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்கப்பது குறித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் சிந்திக்கலாம். இதனூடாக பயணிகளான பொதுமக்களுடன் தங்களது சிறந்த உறவைப் பேணியவாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தங்களது உரிமைகளை ரயில்வே சங்கத்தினரால் வென்றெடுக்கக்கூடியதாக இருக்கும். இதனூடாக ரயில்வே பணியாளர்கள் தங்களின் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.