அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரையின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
தமது அரசாங்கம் 2016 இல் 10,000 ரூபாவினை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், 2016 இலிருந்து 2020 வரை 1:4.07 என்ற விகிதத்தினை பேணும் வகையில் 5 கட்டங்களாக அரச துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதே காலப்பகுயில் 107 சதவீதத்தினால் அதிகரித்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நோக்கத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்பிரதிபலனாக, கீழ் படிநிலையிலுள்ள அரசாங்க ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 2015 இல் காணப்பட்ட 11,730 ரூபாவிலிருந்து 2020 இல் 21,400 ரூபாவாக அதிகரிக்கும்.ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகள் வெளியானதும் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்குமான இடைக்கால மாதாந்தக் கொடுப்பனவாக 2019 ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2,500 ரூபாவினை வழங்குவதற்கு தான் முன்மொழிவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.