இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான பின்புலத்தை அமைப்பதற்குத் தேவையான உதவியை அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்தார். புதிய பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பும் பொறிமுறையை அமைக்கும் பொறுப்பை அமைச்சுக்களுக்கு வழங்கப்படும்.
ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் முகம்கொடுத்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய விவசாய பொருளாதாரம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்றுமதி விவசாய பயிர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி பயிர்ச்செய்ய முடியுமான நிலங்களை வினைத்திறன்மிக்க வகையில் அதற்கு பயன்படுத்திக்கொள்ள தேவையான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதற்காக அரச பொறிமுறையை கிராமங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.