
தேர்தல் முடிவடையும் வரையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இடமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்று என்று தேர்தல் ஆணைக்குழு பொது நிர்வாக, முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சிடம் கோரியுள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தல் முடிவுறும் வரையில் அரச சொத்துக்கள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அரசாங்க மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மக்களின் நிதியை பயன்படுத்தி சமூகப்பணிகளை முன்னெடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டச் செயலாளர்கள், கிராம அதிகாரிகள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்காது தற்போது பணியாற்றும் பகுதிகளிலேயே பணியாற்ற ஆவண செய்யுமாறும் ஓய்வு பெறவுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு சேவை நீடிப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
இவை மீறப்படும்பட்சத்தில் உடனடியாக தமக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் ஆணைக்குழு பொது மக்களிடம் அறிவித்துள்ளது.