
குடும்பமாக புலம்பெயர்ந்து பணியாற்றி நாடு திரும்பும் இலங்கையருக்கான வாய்ப்பு
வௌிநாடுகளில பணியாற்றி மீண்டும் இலங்கை திரும்பும் இலங்கையரின் பிள்ளைகள் கற்பதற்காக அரச பாடசாலைகளில் புதிய ஆங்கில மொழி மூல வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சேகரித்து கல்வியமைச்சிடம் வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது விபரங்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் ஆங்கில மொழி மூல வகுப்புகள் தொடர்பில் கல்வியமைச்சிடம் கோரவுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் பணியாற்றி மீண்டும் நாடு திரும்பும் இலங்கையர்கள் அரச பாடசாலைகளில் இணைத்து கற்பிக்க முடியும் என்று புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களை தௌிவுபடுத்தவும் வௌிநாட்டு தூதரக பத்திரிகைகளில் விளம்பரங்களை வௌியிடவும் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தகவல் வௌியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வௌிநாடுகளில் ஆங்கில மொழி மூல கல்வியை கற்ற மாணவர்கள் இலங்கையிலும் ஆங்கில மொழி மூல கல்வியைத் தொடர்வதற்கு போதுமான எண்ணிக்கை வகுப்புகள் இல்லையென்று அடையாளங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு வௌிநாட்டில் பணியாற்றும் பெற்றோரின் பிள்ளைகள் எண்ணிக்கை விபரங்கள் அவசியம் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் தரவுகளை பெற்றுத் தருமாறு இலங்கை தூதரகங்களிடம் கோரியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தவிர வௌிநாடுகளில் பணியாற்றும் பெற்றோரின் பிள்ளைகளில் இணைப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பணியகத்தினூடாக கடிதமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.