அரச மரியாதையுடன் அக்கினியில் சங்கமமானது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

மறைந்த அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (31) மாலை அக்கினியுடன் சங்கமமானது.

மாரடைப்பால் கடந்த 26  ஆம் திகதி காலமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  இரண்டு நாட்களாக கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் கம்பளை – நுவரெலியா வீதியூடாக வாகன பேரணியில் இரம்பொடை வேவண்டன் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது.

அன்னாரின் பூர்வீக இல்லத்தில் வைத்து ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடுகளும், இந்துமத முறைப்படியிலான சடங்குகளும் இடம்பெற்றன.

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்னற்றி விழிநீர் அஞ்சலி செலுத்தினர். மக்கள் அலைகடலென திரள ஆரம்பித்ததால், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் பொலிஸ் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர்  ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீதிகளில் இருமருங்கிளில் காத்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் வைத்து சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இரு நாட்களாக அஞ்சலி செலுத்தினர். இவ்விரண்டு நாட்களும் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பொது சுகாதார அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டனர். புலனாய்வாளர்களும் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். பொலிஸாரின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் திருப்பியனுப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணியளவில் கொட்டகலையில் இருந்து நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. மக்கள் வீதிகளில் இருபுறங்களிலும் இருந்து கதறி அழுது தமது தலைவருக்கு விடைகொடுத்தனர்.

நோர்வூட் மைதானத்தைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சூழல் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சர்வமதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில பிரமுகர்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், அமரர் தொண்டமானின் குடும்பத்தாரும் என 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது.

செய்தியாளர் : கிஷாந்தன்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435