நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் சம்பள உயர்வு என்பவற்றை வழங்குவதற்கு 902.94 ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகை மற்றும் சம்பள உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதையடுத்தே இவ்வுடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிதியானது நாட்டின் 09 மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகள், உதவி பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களின் ஆசிரியர்களுக்கு வழங்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6/2006 சுற்றுநிருபத்திற்கமைய அனைத்து சேவை சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்பளத்தை சீர் செய்து இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை சட்டமூலத்தை அனுமதிக்க கடந்த ஆட்சிக் காலத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாற்று ஊதியம் மற்றும் சம்பள உயர்வு வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
அதற்கமைய மேல் மாகாணத்துக்கு 212.77 மில்லியன் ரூபாவும் மத்திய மாகாணத்துக்கு 76.16 மில்லியன் ரூபாவும் வடமத்திய மாகாணத்துக்கு 41.12 மில்லியன் ரூபாவும் , வட மேல் மாகாணத்துக்கு 170.94 மில்லியன் ரூபாவும் ஊவா மாகாணத்துக்கு 41.04 மில்லியன் ரூபாவும் தென் மாகாணத்துக்கு 146.80 மில்லியன் ரூபாவும் , கிழக்கு மாகாணத்துக்கு 98.88 மில்லியன் ரூபாவும் , சப்ரகமுவ மாகாணத்துக்கு 107.38 மில்லியன் ரூபாவும் , வடக்கு மாகாணத்து 7.82 மில்லியன் ரூபாவும் தற்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ தினகரன்