அனைத்து ஆசிரியர்களையும் பாடசாலைக்கு அழைப்பிக்கத் தேவையில்லை, கால அட்டவணையில் கடமையுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர்களை தௌிவுபடுத்தும் வகையில் இச்சுற்றுநிரூபம் நேற்று (08) அனுப்பப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கால அட்டவணை மற்றும் வேறு கடமைப்பொறுப்புகள் வழங்கப்படாத ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை. கால அட்டவணை வழங்கப்பட்ட மற்றும் வேறு கடமைப் பொறுப்புகள் வழங்கப்பட்ட ஆசிரியர்களே பாடசாலைகளில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு கால அட்டவணை வழங்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு நாள் கடமைகள் இல்லாதபட்டசத்தில் அன்றைய நாள் அவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை. பாடம் நடத்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத் தருவது போதுமானது.
வேறு கடமைப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் மாலை 3.30 மணிவரையில் பாடசாலையில் தங்கியிருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. கற்பித்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் மட்டுமே பாடசாலையில் 3.30 மணிவரை தங்கியிருந்த கற்பித்தல் போதுமானது. இவ்வாலோசனைகள் இம்மாதம் 27ம் திகதி வரை செல்லுபடியாகும் என்று அச்சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அதிபர்கள் கல்விச் செயலாளர் இதற்கு முன்னர் அனுப்பிய சுற்றுநிரூபத்தை கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதாகவும் அவ்வதிபர்கள் அனைத்து ஆசிரியர்களையும் பாடசாலைக்கு வரவழைக்கின்றனர் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.