எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுமார் 48,000 ஆசிரியர்களை புதிதாக இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பு 12இல் அமைந்துள்ள அல்- ஹுசைனியா கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிதாக ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதுடன் அவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்று தெரிவித்துள்ள பிரதமர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் பயிற்சியற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை என்பது சமூகத்துக்கு சொந்தமான சொத்து ஆகும். சிறந்த எதிர்காலத்திற்கு அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நாடொன்றை கட்டியெழுப்ப பொருளாதாரத்தை மட்டுமே கட்டியெழுப்பி பிரயோசனமில்லை. எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த கல்வியையும் பெற்றுகொடுக்க வேண்டும். கல்வியை கட்டியெழுப்ப நாம் அதிக நிதியை செலவிடுகிறோம். தொழில் பயிற்சிகளை அதிகரிக்கவுள்ளோம். பாடசாலையில் இருந்து வெளியேறும் அனைவருக்கும் தொழிற்கல்வியை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.