
ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக சிலர் வட மத்தியமாகாண பட்டதாரிகளிடம் பணம் சேகரிப்பதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தற்போது நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நேர்முகத்தேர்வினூடாக தகுதியான அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கவுள்ள நிலையில், பிரதேச அரசியல்வாதிகளின் உதவியாளர்கள் சிலர் ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி பட்டதாரிகளிடம் இவ்வாறு பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வட மத்திய மாகாண பட்டதாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்,