டிப்ளோமா தர கற்கைநெறிகளை வழங்கும் நிறுவனங்களை படிப்படியாக பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்களாக தரமுயர்த்தவும் ஆசிரியர் மற்றும் தாதியர் பயிற்சிக்கல்லூரிகளை பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களாக தரமுயர்த்தவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் பல வழங்கும் பட்டப்படிப்பு கற்கை நெறிகள் தொழில்சந்தைக்கு பயனற்றவை. தற்போது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழிற்சந்தைக்கு ஏற்ற விரும்பி இணைந்து கற்கக்கூடிய குறுகிய கால கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. மாணவர்களை இணைத்துக்கொள்வது போலவே தொழிற்சந்தையின் கேள்வியை கருத்திற்கொண்டு கற்கைநெறிகளை மீள்திருத்தம் செய்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் இருத்தல் அவசியம்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தட்டுப்பாடு ஏற்கனவே நாட்டில் காணப்படுகிறது. தற்போது தாதியருக்கு வழங்கப்படும் 3 வருட பயிற்சிநெறியை 4 வருடமாக மாற்றி தாதியர் பட்டப்படிப்பை வழங்கவும் அவர்களுடைய ஆங்கில அறிவை மேம்படுத்தவும், சர்வதேச தரங்களுக்கமைய அவர்களுக்கு வௌிநாடுகளில் பணியாற்ற வாய்ப்புக்களை வழங்கவும் நாம் செயற்படவேண்டும்.
ஆங்கில அறிவு இன்மையினால் பல இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால் இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான தேவையுள்ளது. அதற்கு தேவையான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு புதிய திட்டமொன்றை நாம் அறிமுகப்படுத்துவோம்.
இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு வௌிநாட்டு உயர்ஸ்தானிகரலாயங்களுக்கு விசேட பொறுப்பை வழங்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். பயிற்சி பெறாதவர்களை வௌிநாட்டுக்கு அனுப்புவதற்குப் பதிலாக அனைத்து துறைகளிலும் பயிற்சி பெற்றவர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி எமது நாட்டுக்கு பாரிய அளவான அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்வதுடன் வௌிநாடுகளில் எமது நாடு குறித்த சிறந்த பார்வையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வித்துறையானது நாட்டுக்கு சிறந்த அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறையாகும். ஆசிய உயர்கல்வி நிறுவனங்களில் இலங்கையர் பலர் கற்கின்றனர். பெரிய தொகை பணத்தை செலவிட்டு கல்விக்காக எமது பிள்ளைகள் வௌிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள். வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வௌிநாட்டுப் பிள்ளைகளும் இலங்கையில் கற்பதற்கான திட்டமொன்றை நாம் தயாரிக்கவேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சர்வதேச தரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை நாம் வகுக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வேலைத்தளம்