தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தோரை பாடசாலைகளில் நியமிப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கே அவ்வாசிரியர்களை நியமிக்கவேண்டும், அவ்வாறின்றி தேசிய பாடசாலைகளுக்கு அவ்வாசிரியர்களை நியமிப்பதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டும் என்றும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று கல்வியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் எதிர்காலத்தில் பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.