இந்த வருடத்தை கல்வியமைச்சு கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. அரசின் மொத்த ஒதுக்கீட்டு நிதியில் ஆறுசதவீத அதிகரிப்பை கல்விக்காக ஒதுக்க இருப்பதாகவும் அரசு கூறியிருந்தது.
கல்வித்துறை முன்னைய ஆட்சிக் காலத்தில் சீரழிக்கப்பட்டதாக தற்போதைய அரசாங்கம் அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறது. ஆனாலும் இன்றைய ஆட்சியிலும் முன்னேற்றங்களைக் காண முடியவில்லை.
இந்நிலையில் ஆசிரிய ஆலோசகர்களின் பிரச்சினையும் ஆராயப்பட வேண்டியதாகும். இசுறுபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு முன்னால் நாட்டிலுள்ள ஆசிரிய ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து பல இடங்களிலும் ஆசிரிய ஆலோசகர்கள் பேரணிகளை நடத்தினர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 17 கல்வி வலயங்களிலும் கடமையாற்றுகின்ற சுமார் 300இற்கும் மேற்பட்ட ஆசிரிய ஆலோசகர்கள் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்கள் 20வருடங்களுக்கு மேலாக ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருவதாகவும் தங்களுக்கென்று தனியான சேவையொன்று இல்லாததனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்து முறைப்பாட்டுப்பத்திரங்களை ஆளுநரிடம் வழங்கினர்.
ஆசிரிய ஆலோசகர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தனர். நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். புதிய சேவையாக கல்வித்துறைக்குள் ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டதை கல்வியமைச்சு உடனே அமுலாக்க வேண்டுமென்றும், நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட இப்புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்குவதில் அரசாங்கம் தாமதப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நாட்டின் கல்வி நிர்வாகத்துறை வரலாற்றில் சுமார் 53 வருடங்களாக கவனத்திற் கொள்ளப்படாது வரும் பிரச்சினைக்குரிய விடயமே ஆசிரிய ஆலோசகர்களுக்கென்று தனியான ஒரு சேவை உருவாக்கப்படாமல் இருப்பதாகும்.
இன்று தன்னை ஒரு ஆசிரிய ஆலோசகராக காட்டிக் கொள்ளும் அநேகமானோர் கல்விசார் பணிக்கு அப்பால் வேறு சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமது கடமை நேரங்களில் வேறு இடங்களிலும் இவர்களைப் பார்க்க முடிகின்றது. இது பொதுவான குற்றச்சாட்டு.
நாடெங்கிலும் உள்ள ஆசிரியர்களின் கற்றல்,-கற்பித்தல் செயற்பாட்டினை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் நோக்குடன் ஆசிரியர்களுக்கு மிக நெருக்கமாக நின்று தொழில்வழிப்படுத்தும் கடமையை மேற்கொள்பவர்களே ஆசிரிய ஆலோசகர்கள் ஆவர்.ஆசிரிய ஆலோசகர்கள் முதன்மை ஆசிரியர்கள் என்றும் சில நாடுகளில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூலவள ஆசிரியர்களாக செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுவதாகும்.
இலங்கையில் 1972ம் ஆண்டு ஆரம்பக் கல்வித்துறையில் ஒன்றிணைந்த பாடவிதானத்தை அமுல்படுத்துவதற்காக பாடவிதான அபிவிருத்தி நிலையத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட மூலவள ஆசிரியர்களே இப்பதவியின் ஆரம்பமாகும். 1986இல் தேசிய கல்வி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆசிரிய ஆலோசகர்களுக்கு விசேட கற்கைநெறி வகுப்புகள், வதிவிடப் பயிற்சி நெறிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் தாம் இணைக்கப்பட்டுள்ள பாடசாலையில் இரண்டு நாட்களும், தமக்கென குறித்தொதுக்கப்பட்ட கோட்டக்கல்வி பிரிவில் 3நாட்களும் சேவையாற்றி வந்தனர்.
1992ம் ஆண்டிலிருந்து இவர்கள் கல்வித் திணைக்களத்துடனும், பின்பு வலயக் கல்விப் பணிமனைகளிலும் இணைப்புச் செய்யப்பட்டு முழுநேரமாக ஆசிரிய ஆலோசகர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
தம் துறைசார்ந்த பாடம் தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதோடு தயாரிக்கப்பட்ட வேலைத் திட்டத்தில் காணப்படும் ஒவ்வொரு பாடஅலகினையும் கற்பிப்பதற்கான சிறப்பு நோக்கங்களை வகுத்து, கற்பித்தல் முறைமைகளையும்,கற்பித்தல் உபகரணங்களையும் திட்டமிட்டு மேம்படுத்துவது இவர்களது கடமையாகும்.
நூறுநாள் அரசாங்கத்தில் ஆசிரிய ஆலோசகர்களுக்கென்று தனியானதொரு சேவையை உருவாக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும்,ஓரிரு மாதங்களில் அவர்களுக்கென்று தனியான சேவை உருவாக்கப்படுமென்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.
இப்போது விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கும் நிலையில் ஆசிரிய ஆலோசகர்களுக்கான தனியான சேவை எங்கே என பாதிக்கப்பட்டுள்ள 4000இற்கும் மேற்பட்ட ஆசிரிய ஆலோசகர்கள் கோருகின்றனர்.
உண்மையில் கல்வியமைச்சானது இப்புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையினை உருவாக்குவதில் பல்வேறு தர்மசங்கடமான நிலைமைகளை சந்தித்து வருகின்றது என்பது நிதர்சனம்.
ஏற்கனவே கல்வியமைச்சிற்குள் இலங்கை ஆசிரியர் சேவை என்றும்,இலங்கை அதிபர் சேவை என்றும்,இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவை என்றும்,இலங்கை கல்வி நிர்வாக சேவை என்றும் 4 சேவைகள் இருந்து வரும் நிலையில், புதிதாக உருவாக்கப்படும் இந்த ஆசிரிய ஆலோசகர் சேவையினை இலங்கை ஆசிரியர் சேவைக்கும்,இலங்கை அதிபர் சேவைக்கும் இடைப்பட்ட இடத்தில் வைத்துப் பார்ப்பதா?அல்லது இலங்கை அதிபர் சேவைக்கும்,இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கும் இடையில் வைத்துப் பார்ப்பதா?என்ற புதியதொரு குழப்பம் உள்ளது.
அத்துடன் ஆசிரிய ஆலோசகர் சேவையானது தனியானதொரு சேவையாக அங்கீகரிக்கப்படுமிடத்து அந்தச் சேவையினுடைய முழுப்பொறுப்பையும் இலங்கை நியமன பிரமாணச் சட்டங்களின்படி பொதுச் சேவை ஆணைக்குழுவே பெற்றுக் கொள்ளும். அவ்வாறு பொதுச்சேவை ஆணைக்குழு பெற்றுக் கொள்ளுமிடத்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு தழுவிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டு ஆசிரியர் கல்வியிலும்,பாடரீதியான அதிகரித்த தகைமையினையும் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சேவைக்கு அமர்த்தப்படுவர்.அவர்கள் தங்கள் வலயத்திலேயே அல்லாமல் நாட்டிலுள்ள எந்த வலயத்திற்கு ஆசிரிய ஆலோசகர்கள் தேவைப்படுகின்றதோ அங்கு நியமிக்கப்படுவர்.
உண்மையில் ஆசிரிய ஆலோசகர் என்பவர் எந்தப் பாடத்துக்கான ஆலோசகராக நியமிக்கப்படுகின்றாரோ அந்தப் பாடத்தில் சிறப்புப் பட்டத்தை பெற்று அதிலே வகுப்புச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர் கல்வியின் அடிப்படையையோ அல்லது அதிகரித்த நிலையையோ பெற்றிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.
ஆனால் நாட்டிலும் தற்போது வடக்கு,கிழக்கிலும்,மலையகத்திலும் உள்ள வலயக்கல்வி அலுவலகங்களில் கடமையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களில் அதிகமானோர் மேற்சொன்ன தகைமைகளைப் பெற்றிருக்கவில்லை என்றும்,அவர்கள் ஆசிரிய ஆலோசகர்களுக்குரிய தகுதியுடனும் இல்லை என்பதும் கல்வியமைச்சின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனாலேயே கல்வியமைச்சு அவர்களை உள்ளீர்ப்பதிலும்,புதிதாக வெளியேயிருந்து விண்ணப்பங் கோரி ஆட்களைச் சேர்த்து இப்புதிய சேவையினை உருவாக்குவதிலும் தயக்கம் காட்டி வருகின்றது.
ஆசிரிய ஆலோசகர்களுக்கென்று தனியானதொரு சேவை அமையாதவிடத்து தகுதியில்லாதவர்களே பாடத்துறையை ஆளுகின்ற மோசமான நிகழ்வுகளும் வளரத்தான் செய்யும். ஆசிரிய கல்வியை அதிகமாக நிறைவு செய்த ஆசிரியர் பலர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்புச் செய்யப்படாமல் விடக் கூடிய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளும் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாகும்.
நன்றி – தினகரன்