பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களினால் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரையும், பிரதமரின் மக்கள் தொடர்பு ஆலோசகர்களையும் சந்தித்திருந்தனர்.
பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களான தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த வேதனமே வழங்கப்படுவதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளர்.
தாம் வசிக்கும் இடத்திலிருந்து தூரப் பிரதேசங்களிலேயே தாம் சேவையாற்றுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தங்களது வேதனத்தை அதிகரிக்குமாறும், ஆசிரிய சேவையின் 3ல்-2ம் தரத்துக்கு நியமனம் பெற தங்களுக்கு தகுதி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும், பிரதமரின் மக்கள் தொடர்பு ஆலோசகரும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கை தொடர்பாக கடிதம் வழங்கியிருந்தனர்.
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களின் கோரிக்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி ஆராய்ந்து, நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தைக்கமைய, அவர்களின் கோரிக்கை நியாயமானது என இனங்காணப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமையளித்து ஆராயுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அலுவலகத்தால் அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரையும் நேற்று முன்தினம் அவர்கள் சந்தித்ததாகவும், அவர்களின் கோரிக்கையை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு தெரியப்படுத்துவதாக அவர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.