ஆசிரியர் ஆட்சேர்ப்பு சரத்துக்களுக்கு புறம்பான வகையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24) அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய ரீதியில் வெளிப்படுத்திய விளையாட்டுத் திறமைகள் மற்றும் விளையாட்டுத்துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான புதிய விதிமுறை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
விளையாட்டுக்களை பயிற்றுவிப்பதற்கு சிறந்த விளையாட்டுத்துறை ஆசிரியர்களை தெரிவதில் நிலவி வரும் சிக்கல் நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு புதிதாக 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.