மலையக தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து போராட்டம் நேற்றுக்காலை (28) மட்டக்களப்பில் நடைபெற்றது.
முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், அவ்வமைப்பின் தலைவர், எம்.பி எஸ். வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாகாணசபை, பிரதேசசபை மற்றும் முற்போக்குத் தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இம்மாதம் 5ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேதன மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது எதிர்வரும் காலங்களில் கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.