இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 4ம் திகதி இடமாற்றம் வழங்கப்பட்ட பணியகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் ஐவரின் இடமாற்றத்தையே ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உட்பட சில பிரதேசங்களில் இடம்பெற்ற திறந்து வைப்பு வைபவங்களை தொடர்பான செய்திகளை சேகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் உத்தரவை நிராகரித்தமையின் காரணமாக இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளுக்கு வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றங்களை இடைநிறுத்தி, அவை தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் பணியகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்கனவே பணியாற்றிய ஊடகப்பிரிவிற்கு சமூகமளிக்குமாறு பணியக பிரதி பொது முகாமையாளர் (நிர்வாகம் மற்றும் பொது தொடர்பு) அவ்வதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்றும் பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.