இலங்கை வங்கியின் அனைத்து கிளைகளும் இன்று (06) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியில் பொது முகாமையாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்க கடந்த 80 வருட காலம் பின்பற்றிய முறையை தவிர்த்து அமைச்சரவை கடிதத்தினூடாக குறைந்த தகமைவாய்ந்த ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது
குறித்த பதவியை வகிக்கக்கூடிய அனைத்து தகுதியுமுடைய செனரத் பண்டார என்ற அதிகாரியை பதவி விலக்கி அவரையும் விட தகமைக் குறைந்த ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வடையாள வேலைநிறுத்தப்போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
நாடுபூராவும் உள்ள 637 கிளைகளில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்கள் இப்போராட்டதில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.