வணிக கப்பல் பணியாளர்கள் மற்றும் அத்துறை சார்பில் வணிக கப்பல் செயலக பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்னவுடனான நேர்காணல்.
வணிகக் கப்பல் துறை சார்ந்த தொழில் தற்போது அதிக சம்பளம் வழங்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. உலகத்தினருடைய கவனத்தை அதிகம் வசீகரித்து வரும் இத்துறையில் இலங்கையையும் உட்படுத்தல் மற்றும் தயார்படுத்தல் பொறுப்பு வணிக கப்பல் செயலாளர் காரியாலத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. வணிக கப்பல் செயலகம் என்றால் என்ன?
இலங்கை சமுத்திர வணிக கப்பல் அலுவல்களுக்கான விதிமுறைகள், அதற்கான சட்ட திட்டங்களை உருவாக்குதல், செயற்படுத்துதல் என்பன இச்செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐநா அமைப்பு மற்றும் அதனைச் சார்ந்த சர்வதேச சமுத்திர அமைப்பின் (IMO), இலங்கையின் கேந்திர நிலையமாக இச்செயலகம் செயற்படுகிறது. 1971ம் ஆண்டு 52ம் இலக்க வணிக கப்பல் சட்டம், 1972ம் ஆண்டு 10ம் இலக்க கப்பல் முகவர் நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் வழங்கல் சட்டம் மற்றும் 1983ம் ஆண்டு 40ம் இலக்க நீதிமன்ற எல்லை அதிகார சட்டத்தின் கீழ் மார்ஷலின் பொறுப்பு அலுவல்களை செயற்படுத்துதல் ஆகிய பொறுப்புக்களும் எமது செயலகத்திடமே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
வணிக கப்பல் பணியாளர்கள் என்றால் யார்? அவர்கள் குறித்து சிறு விளக்கம் தருவீர்களா?
குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒப்பந்த அடிப்படையில் வணிக கப்பல்களில் பணியாற்றுபவர்கள் வணிகக் கப்பல் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.18 பூர்த்தியடைந்த உரிய தகைமைகள் உடையவர்கள் இப்பணியில் ஈடுபட முடியும். உலக வணிக கப்பல்களில் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாத பதவிகளில் அதிக எண்ணிக்கையான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதிகாரியல்லாத பதவிகள் பணிபுரிவோர் அனுபவம் மற்றும் தொழில்சார் அறிவை மேம்படுத்திக்கொள்வதனூடாக காலப்போக்கில் அதிகாரி மட்டத்திற்கு அல்லது பொறியிலாளர் பிரிவில் உயர் அதிகாரியாகவும் பணிபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. அதாவது, குறிப்பிட்ட தகைமைகளுடன் சாதாரண கப்பல் பணியாளர் ஒருவர், கப்பல் கெப்டன் மற்றும் பிரதான கப்பல் பொறியிலாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
தொழில்நாடி செல்வோர் முதலில் எதிர்பார்ப்பது சம்பளத்தைத்தான். அவ்வாறிருக்கு வணிக கப்பல் பணியாளர்களாக இணைந்தால் திருப்தியை ஏற்படுத்தக்கூடிய சம்பளம் கிடைக்குமா?
ஆம், உயர் நிலை அதிகாரியல்லாது சாதாரண பணியாளர்களுக்கு வெளிநாட்டு வணிக கப்பல்களில் மாதாந்த சம்பளமாக 500 அமெரிக்க டொலர்களை சம்பளமாக பெற முடியும். அதாவது இலங்கை பணத்தில் 75,000 ரூபாவை மாதாந்த சம்பளமாக பெறலாம். கெப்டன் அல்லது பிரதான கப்பல் பொறியிலாளர்கள் மாதாந்தம் 10,000 அமெ. டொலர்களை பெறலாம். கப்பல் பணியாளர்கள் சாதாரணமாக வருடத்திற்கு 23 மில்லியன் அமெரிக்க டொலரை (3500 மில்லியன் ரூபா) அந்நிய செலாவணியாக இவர்கள் நமது நாட்டுக்கு பெற்றுகொடுக்கின்றனர். அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
கப்பல் பணியாளராக இணைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு சில படிமுறைகள் உள்ளன. முதலில் தான் எந்த துறையை தெரிவு செய்யவுள்ளார் என்பதை அடையாளங்காணவேண்டும். அதாவது பொறியிலாளர், கப்பல் தள தொழிலாளர், சமையற்காரர் என தனக்கு பிடித்தமான, திறமையுள்ள துறையை தெரிவு செய்ய வேண்டும். தாம் தெரிவு செய்துள்ள துறையில் தொழிற்கல்வியை பெறவேண்டும். அதுதான் ஆரம்ப கட்ட நடவடிக்கை.
நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. எந்த நிறுவனத்தில் கற்றாலும் கப்பலில் பணியாற்ற செல்ல முடியுமா?
இல்லை.அதற்கு வணிக கப்பல் செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்தை தெரிவு செய்ய வேண்டும். தற்போது 11 நிறுவனங்கள் எமது செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் வழங்கப்படும் கற்கை நெறிகள் சர்வதேச தரத்தை கொண்டவையாக உள்ளனவா என்று நாம் அவதானத்துடன் கண்காணிக்கிறோம். வருடாந்தம் கணக்காய்வு மேற்கொள்கிறோம். உங்களுக்கு தேவையிருப்பின் அந்நிறுவனம் குறித்து எம்முடன் 011 2441429 தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். வணிக கப்பல் செயலகம், முதலாம் மாடி, பிரிஸ்டல் கட்டிடம், யோர்க் வீதி, கொழும்பு என்ற முகவரிக்கோ அல்லது www.dgshipping.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து மேலதிக தகவல்களை பெற முடியும்.
கற்கை நெறியை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமா? அல்லது வேறு பரீட்சைகளுக்கும் தோற்ற வேண்டுமா?
கற்கை நெறியை பூர்த்தி செய்த பின்னர் உரிய பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது கடவுச்சீட்டின் பிரதி, மருத்துவச் சான்றிதழ் கிராம சேவகர் சான்றிதழ், பொலிஸ் சான்றிதழ் என்பவற்றையும் விண்ணப்பத்துடன் கையளித்து சில தினங்களில் சி.டி.சி சான்றிதழ் எனப்படும் Merchant Shipping Division கப்பலில் பணியாற்ற மருத்துவ ரீதியாக தகுதி பெற்றவர் என்ற சான்றிதழ் கையளிக்கப்பட வேண்டும். அந்த சான்றிதழ் கையளிக்கப்பட்ட பின்னர் கப்பலில் பணியாற்ற முடியும்.
சாதாரண பதவிகளில் இருந்த உயர் பதவிகளுக்கு செல்வது எவ்வாறு?
உயர் பதவிகளுக்கு செல்வதற்கு சிடிசி சான்றிதழுக்கு மேலதிகமாக சிஓசி எனப்படும் நிபுணத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அச்சான்றிதழை பெற அனுமதிக்கப்பட்ட பயிற்சிப் பாடசாலையொன்றில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் எமது நிறுவனத்தினால் நடத்தப்படும் விசேட எழுத்துமூல மற்றும் வாய்மூல தேர்வில் தோற்றி நிபுணத்துவ சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். இது ஒன்றும் கஷ்டமான விடயம் அல்ல. இதுவரை சுமார் 46,000 பேர் அச்சான்றிதழ்களை எம்மிடமிருந்த பெற்றுக்கொண்டுள்ளனனர். அவர்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொழிலுக்கு நல்ல மதிப்பு காணப்படுகிறது. அதனால் சமூகத்தில் உயர் வரவேற்பும் மதிப்பும் கிடைக்கும். இதற்கு முன்னர் சிடிசி மற்றும் ஒடிசி ஆகிய சான்றிதழ்களை வழங்குவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் எம்மிடம் காணப்படவில்லை. விளங்கிக் கொள்ளும் வகையில் கூறுவதாயின் நாம் வழங்கும் சான்றிதழ் உயர்தரத்துடன் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. இதனால் வணிக கப்பல் ஊழியர்கள், கப்பல் சொந்தக்காரர்கள், கப்பல் முகவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தனர். போலியான சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டமையினால் தொழில்ரீதியான பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதனால் இலங்கை குறித்த சர்வதேச மட்டத்தில் காணப்பட்ட கௌரவத்திற்கும் பங்கம் விளைவிப்பதாக இருந்தது. தகைமையுள்ள கப்பல் பணியாளர்களின் தொழிலும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுப்பட இது காரணமாக இருந்தது.
உங்கள் நிறுவனத்தினால் வணிக கப்பல் ஊழியர்களுக்காக வழங்கப்படும் சான்றிதழ் இவ்வருடம் முதல் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அவசியம் என்ன?
இலங்கை கப்பற்றுறை ஊழியர்கள் தரம்மிக்கவர்களாகவும் தொழிற் தகமைமிக்கவர்களாகவும் பயிற்சி பெற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு வெளிநாட்டு கப்பல்களில் சிறந்த வரவேற்பு உள்ளது. இலங்கை சர்வதேச சமுத்திர அமைப்பின் whitelist உயர் இடத்தில் உள்ள நாடாகும். இச்சர்வதேச வரவேற்பை நாம் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். அதனால் நாம் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்றே சர்வதேச சமுத்திர அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பவற்றின் பிரகடனங்களுக்கமைய நவீன பாதுகாப்புடன் கூடிய சான்றிதழ்களை கடந்த மாதம் தொடக்கம் வழங்க ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதி பதவியேற்றதன் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஜனவரி 17ம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது முதலாவது சான்றிதழ் வெளியிடப்பட்டது.
இப்புதிய திட்டத்திற்கான நிதியை திரைசேரி வழங்குகிறது. புதிய சான்றிதழ் வெளியிடப்பட்டதுடன் இதுவரை வணிக கப்பல் ஊழியர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும், கப்பல் உரிமையாளர்கள், முகவர்கள், மற்றும் ஏனைய தரப்பினர் சர்வதேச துறைமுகங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகளும் குறையும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் உரிய நிறுவனங்களுக்கிடையே தொழில்நுட்பரீதியான அந்நியோன்ய தொடர்பை மேற்கொள்ளவுள்ளோம். இதனை ஈ சேவையென அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இதனூடாக மேலும் செயற்றிறன் மிக்க சேவையை வணிக கப்பல் ஊழியர்களுக்கு வழங்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.
நன்றி- அரசாங்க தகவல் திணைக்களம்