நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் அரசதொழில்களை இழந்தவர்களை மீள சேவையில் இணைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படல் வேண்டும். என வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த வடக்கு மாகாணசபை அமர்வில் சுகாதார அமைச்சரால் விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாத்திற்கு பின்னர் தொழில்களை இழந்த அரச அலுவலர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின், பணியாளர்களை மீள சேவைக்கு இணைப்பதற்கான அரசாங்க சுற்றிக்கையின் கால எல்லை மேலும் நீடிக்கப்படல் வேண்டும்.
16.02.2016 திகதி 04/2006 இலக்க அரசாங்க சுற்றிக்கையின் பிரகாரம் தொழில்களை இழந்த அரச உத்தியோகத்தர்கள் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை முடிவடைந்துள்ளது. தற்போது வெளிநாடுகளிலிருந்து பலர் மீண்டும் சேவையில் இணைய நாட்டுக்கு மீள வருகின்றனர்.
இதனால் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பதற்காக மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படல் வேண்டுமென இந்த சபையை கோருவதாக தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்மூலம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் வெளிநாடுகளுக்கு சென்று மீளத்திரும்பிக்கொண்டிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நன்மை கிடைக்குமென நம்பப்படுகின்றது. என மேலும் தெரிவித்துள்ளார்.