இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இதுவரை இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுவரை 82 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 32 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளன என்றும் அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வித்துறை சார் ஊழியர்களே அதிகளவு இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 அதிபர்கள், 2 பிரதி அதிபர்கள் உட்பட 9 கல்வித்துறை சார் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர பிரதேச செயலகங்ககளில் பணியாற்றும் 6 அதிகாரிகள், பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் 6 அதிகாரிகள், பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபை என்பவற்றில் பணியாற்றும் 5 பேரும் வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர நுகர்வோர் அதிகாரசபையில் பணியாற்றும் நால்வர், மகாவெலி அதிகாரசபையில் பணியாற்றும் இருவர், நீதித்துறையில் பணியாற்றும் இருவர், விவசாய சேவைகள் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றும் இருவர் இந்த சுற்றிவளைப்புக்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.