எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு முன்னர் நியமனம் வழங்கப்படாவிடின் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சமூகம் எச்சரித்துள்ளது.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதியளித்து நான்கு மாதங்கள் பூர்த்தியடைந்த போதிலும் அதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் மாகாண மற்றும் மத்திய மாகாணங்கள் எடுக்க தவறியமையை சுட்டிக்காட்டி கடந்த 15ம் திகதி ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திய வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் உள்ளூராட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் உள்ள சுமார் 3500 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி தொடக்கம் 143 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினூடாக பயிற்சியுடன் கூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கவுள்ளதாக அரசாஙகம் உறுதிமொழி வழங்கியது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. வாக்குறுதியளித்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னமும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாம் மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நியமனம் தேர்தலுக்கு பின்னர் வழங்கப்படுமாயின் பல மாதங்களுக்கு தள்ளிப்போகும் அபாயம் உள்ளது. எனவே உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் நியமனம் வழங்கவேண்டும். இல்லையேல் நாம் தேர்தலை புறக்கணிப்போம் என வடக்கு வேலையில்லா பட்டதாரிகள் எச்சரித்துள்ளனர்.
தினகரன்/ வேலைத்தளம்