உள்வாரிப்பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கிய பின்னரே வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஜன ராஜகருணா, ஐ.ம.சு.மு எம்பி சி.பி. ரத்நாயக்க ஆகியோர் நேற்று (07) பாராளுமன்றில் கேள்வியெழுப்பிபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை. வௌிவாரிப்பட்டதாரிகள் பெரும்பாலும் வேறு தொழிலில் இருந்துக்கொண்டே பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்றனர். பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் வேறு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு கிடைத்தாலும் அதில் அவர்கள் திருப்தியடைவதில்லை.
பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாக கொண்டே நாம் நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வேலையில்லா பட்டதாரிக்கு நியமனம் வழங்குவதையே அரசாங்கம் முன்னிலைப்படுத்தியுள்ளது. 2018 மே 25ம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து பணியில் இணைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாயிரம் பேர் பயிற்சியில் இணைப்பதற்கு அழைக்கப்பட்டனர். எனினும் 3200 பேர் வரையில் மட்டுமே நியமனங்களை பெற்றனர். தொடர்ந்து வழங்குவதற்கு ஒக்டோபரில் வேலைவாய்ப்பு இருக்கவில்லை. வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய 16000 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.